நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கே மின் விநியோகம் இருக்கும் என்றும், அதன் பின்னர் மாநிலம் இருளில் மூழ்கும் என்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தியாவின் மொத்த மின் தேவையில் 70 சதவீதம் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளதன் விளைவாக நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கரித் தட்டுப்பாட்டால், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ‘இனிமேல் நாள்தோறும் 3 மணி நேரம் கட்டாய மின்வெட்டு நடைமுறையில் இருக்கும்’ என்று பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் இந்த 3 மணி நேரம் மின்வெட்டு என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் இனி மின்வெட்டு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுவதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதுபோன்ற நிலக்கரி பற்றாக்குறையால் சீனா கடும் மின் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அங்கு காலைமுதல் மாலை வரை பல பகுதிகளில் மின்வெட்டு நிலவுகிறது.