டெல்லி:-
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் தெருவோரங்களில் வசிப்பவர்கள், ஆதரவற்றோர் உணவின்றி அவதிப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்தியா முழுவதும் தன்னார்வலர்கள் ஆங்காங்கே உணவு விநியோகம் செய்து வருகின்றனர்.
அதேபோல் வேலையின்மையால் கூலித்தொழிலாளர்கள் அவதிப்படும் சம்பவமும் நடைபெறத்தான் செய்கிறது. அந்த வகையில் இளைஞர்கள் இருவர் பசிக்கொடுமையால் 100-க்கு போன் செய்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லி இன்டர்லாக் (Inderlok) பகுதியின் அமர் பார்க் பூங்கா பகுதி அருகே முஹம்மது தில்ஷாத், பிரசாத் என்னும் 20 வயதான இளைஞர்கள் டெல்லியில் உள்ள செருப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் வேலை செய்த நிறுவனம் தற்காலிகமாக செயல்பாட்டை நிறுத்தியுள்ளது.
இருவரும் கையில் இருந்த பணத்தை வைத்து பிஸ்கட் வாங்கி சாப்பிட்டு, தண்ணீர் குடித்து பசியை ஆற்றியுள்ளனர். ஆனால் கடந்த வியாழன் அன்று கையில் இருந்த பணம் தீர்ந்து போனது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனவர்கள் 100-க்கு போன் செய்து தங்களின் நிலையை எடுத்து கூறியுள்ளனர். இதை தொடர்ந்து டெல்லி போலீசார் அவர்களின் நிலையை நேரில் சென்று உறுதி செய்து உணவு வாங்கி கொடுத்துள்ளனர்.
அவர்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, மாஸ்க், க்ளௌஸ் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுத்தனர், மேலும் 1000 ரூபாய் பணமும் கொடுத்து போலீசார் உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டெல்லி (வடக்கு) காவல்துறை உதவி ஆணையர் மோனிகா பரத்வாஜ் (Monika Baradhwaj) அளித்த பேட்டியில்:-
அந்த இளைஞர்கள் காவல் உதவிமையத்திற்கு அழைத்ததும் உடனடியாகக் போலீசார் உதவி செய்தனர் தில்ஷாத் என்பவர் பீகாரைச் சேர்ந்தவர் அதேபோல் அவரது நண்பரான பிரசாந்த் கோரக்பூரை சேர்ந்தவர். எங்கள் காவலர்கள் அவர்களுக்குத் தேவையான ரேசன் பொருட்கள் மற்றும் சிறிதளவு பணமும் கொடுத்து உதவினர். பணம் இல்லை என்ற நிலையில் திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடாமல் காவல்துறைக்கு போன் செய்து உதவி கேட்டதை வரவேற்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
அந்த இரு இளைஞர்களுக்கு போலீசார் உதவி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.