மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள 61 மாடிகள் கொண்ட பிரமாண்ட குடியிருப்பில் இன்று திடீரென்று தீ பிடித்து விபத்து ஏற்பட்டது.
மும்பையின் லால்பாக் பகுதியில் கர்ரிசாலை அருகே உள்ள ஒன் அவிக்னா பார்க் 61 குடியிருப்பு கட்டிடத்தின் 19 வது மாடியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதை பலர் காயமடைந்தனர். தீயில் இருந்து தப்பிக்க முயன்று 19வது மாடியிலிருந்து குதித்த நபர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து 12 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே 19வது மாடியின் செக்யூரிட்டியாக பணியாற்றிவந்த அருண் திவாரி(30) என்பவர், தீ விபத்து ஏற்பட்டதையறிந்து பால்கனி வழியாக கம்பியை பிடித்து கீழே இறங்கி விட முயற்சி செய்துள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அவர் 19 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த கெம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அதிகாரி ஒருவர், அருண் திவாரி சில மணி நேரம் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் கை நழுவியதால் அவர் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இச்சம்பவம் குறித்து பேசிய அவர்,
பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாலை 4.20 மணியளவில் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அருண் திவாரியை காப்பாற்ற தீயணைப்புத்துறையினர் ஏணியை ஏற்பாடு செய்தனர். அதற்குள்ளாகவே அவர் கை நழுவி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்தார்.
இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அருண் திவாரி கீழே விழுந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.