ஹைதராபாத்:-
33 வருட கடும் போராட்டத்திற்கு பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக அறிவிக்கப்பட்டால் ஆல் பாஸால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் முஹமது நூருதீன் (51). கடந்த 1987-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இதில் ஆங்கிலத்தில் அவர் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் தனது விடாமுயற்சியால், கடந்த 33 ஆண்டுகளாக அரியர் தேர்வு எழுதி வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தார்.
தன்னுடைய முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல தொடர்ந்து 33 ஆண்டுகளாக தேர்வு எழுதி வந்தார். இந்நிலையில், அவர் இந்த ஆண்டும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். தற்போது, கொரோனா ஊரடங்கால், தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தெலுங்கானா மாநில அரசு அறிவித்த நிலையில், நூருதீனும் தேர்ச்சி பெற்றார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து முஹமது நூருதீன் கூறுகையில்:-

1987 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு (SSC) தேர்வு எழுதினேன். ஆங்கிலத்தில் நான் கொஞ்சம் வீக் என்பதால் தோல்வி அடைந்தேன். ஆனாலும் தொடர்ந்து 33 ஆண்டுகளாக தேர்வு எழுதினேன். ஆனால் பாஸ் மார்க் 35ஐ எடுக்க முடியாமல், 30 மற்றும் 33 மதிப்பெண்கள் எடுத்து, தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தேன். 33வது ஆண்டாக இந்த ஆண்டும் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தேன் ஊரடங்கு காரணமாக அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டதால் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளேன்.
1989 ஆம் ஆண்டு முதல் காவலாளியாக பணியாற்றி வருகிறேன். தற்போது 7,000 ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறேன். நல்லவேளையாக நான் காவலாளியாக பணியில் சேர்ந்த பொழுது எனது பத்தாவது வகுப்பு சான்றுகளைக் அவர்கள் கேட்கவில்லை. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை அடுத்து நான் மேற்படிப்பு படிக்க உள்ளேன். தொடர்ந்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். ஏனெனில் கல்வி கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறினார்.