மும்பை துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பலில் திடீரென நடந்த வெடி விபத்தால் இந்திய கடற்படை வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
மும்பையில் கடற்படை கப்பல்களை நிறுத்தும் துறைமுக பகுதியில் இந்தியாவின் கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். ரன்வீர் என்ற போர்க்கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று மாலை சரியாக 4.30மணி அளவில் கப்பலின் உள்பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்தவுடன் கடற்படை வீரர்கள் அப்பகுதிக்கு சென்று துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்ததாகவும், இன்னும் சில வீரர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விபத்தால் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுக்கு எதுவும் நிகழவில்லை என்றும், கப்பலுக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.