ராம்பூர்:-
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு சமோசா, சட்னி கேட்டு தொந்தரவு செய்த நபருக்கு, கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் படி ஆட்சியர்/ மாஜிஸ்ட்ரேட் ஆஜ்நேய குமார் சிங் தண்டனை வழங்கியுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களின் அவசர, அத்தியாவசிய தேவைக்காக 24 மணி நேர இலவச உதவி எண் சேவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனது வீட்டிற்கு சூடான சமோசாக்களை அனுப்பும் படி ஒருவர், அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். முதலில் இதை சேவை மைய அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை, தொடர்ந்து போன் செய்ததை தொடர்ந்து எச்சரித்து உள்ளனர்.
இதையடுத்து 4 சமோசாக்களை சட்னியுடன் அந்த நபரின் வீட்டுக்கு அனுப்ப உத்தரவிட்ட ராம்பூர் ஆட்சியர்/ மாவட்ட மாஜிஸ்ட்ரேட், ஆஜ்நேய குமார் சிங் பொது சேவையை தவறாக பயன்படுத்தியதாக குற்றத்திற்காக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் சேர்ந்து அனுப்பினார்.