தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்ததையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

மேலும், கொரோனா தொற்று காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பள்ளி திறக்கப்பட்ட 20 நாட்களில் ஆங்காங்கே சில பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மீண்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கல்வி பயிலும் நிலையில், மாணவர்களுக்கு ஏற்படும் தொற்று மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் 8 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மேல்நிலைப்பள்ளியிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் பயின்ற வகுப்புகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்கள் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும், வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவிக்கும், குணக்கம்பூண்டி கிராமத்தில் பிளஸ்-2 படிக்கும் இரண்டு மாணவிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டு பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டது. இரண்டு பள்ளிகளிலும் சுகாதார பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில், தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு தொற்று பரவி வருவதால் பெற்றோர்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது.