செஞ்சி அருகே மணலப்பாடி மதுரா மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன் (வயது 37) இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த துளசி (22) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கோகுல் (4), பிரதீப் (2) ஆகிய மகன்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே துளசி தனது தாய் வீட்டில் 2-வது மகன் பிரதீப்புடன் இருந்து வருகிறார்.
இந்நிலையில், துளசி தனது மகன் பிரதீப்பை சரமாரியாக தாக்கி அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, துளசியின் கணவர் வடிவழகன் அளித்த புகாரின் அடிப்படையில் துளசி மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்திற்கு சென்று துளசியை இன்று கைது செய்துள்ளனர்.
துளசியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், துளசி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் ஆண் நண்பர் பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் குழந்தையை தாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் பிரேம் குமாரை பிடிப்பதற்காக சென்னை விரைந்துள்ளனர்.