பெர்லின்:-
ஜெர்மனியின் பர்ன்ஸ்விக் நகரில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றிலிருந்து 101 வயது பாட்டி ஒருவர் தனது மகளை காண்பதற்காக முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜெர்மனி முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெர்மனியின் பர்ன்ஸ்விக் நகரில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றிலிருந்து 101 வயது மூதாட்டி ஒருவர் தனது மகளின் பிறந்தநாள் முன்னிட்டு அவரைக் காண்பதற்காக அந்த முதியோர் இல்லத்தில் இருந்து தப்பியுள்ளார்.
எனினும், தனது மகளின் வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் தவித்த இந்த மூதாட்டியை போலீசார் விசாரித்துள்ளனர். பின்னர் அவர் விஷயத்தை கூறியதையடுத்து, அவர் கூறிய முகவரிக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து அவரது மகள் கூறுகையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் அவரை அந்த முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டதாக தெரிவித்தார். எனவே தனது பிறந்த நாளில் தன்னை காண வேண்டும் என்ற ஆசையில் அவர் இங்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
எனினும் போலீசார் பாதுகாப்பு கருதி போலீஸ் வாகனத்தில் கண்ணாடி வழியாக அவரை காண அனுமதித்தனர். வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் அவரை சம்பந்தப்பட்ட முதியோர் இல்லத்தில் சென்று ஒப்படைத்தனர்.
ஜெர்மனியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் முதியோர் இல்லங்களுக்கு பார்வையாளர்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.