சியோல்:-
திரும்பி வந்த இரண்டே நாளில் தனது அதிரடி வேலைகளை காட்டத் தொடங்கிவிட்டார் கிம் ஜோங் உன் தென்கொரியா மீது எந்தவித காரணமுமின்றி தாக்குதலை தொடுத்துள்ளார்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அதிரடி நடவடிக்கைகள் உலக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவதும் அடிக்கடி நடப்பதுதான். அந்த வகையில் உலக நாடுகள் கொரானோ அச்சத்தில் உறைந்து கிடக்கும் இன்றைய சூழலில், கடந்த 3 வாரங்களாக கிம்மை காணவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
எந்த பொது நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்காததால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினரும், கிம் இறந்து விட்டார் என்று மற்றொரு தரப்பினரும் வதந்தி பரப்பி வந்தனர்.இந்த நிலையில் கிம் ஜாங் உன் மே 1 அன்று வடகொரியாவில் நடைபெற்ற உர ஆலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதன் மூலமாக அவரது உடல்நிலை தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அவர் உயிருடன் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தெரிவித்தார்.
ஆனால் வெளியில் வந்தவுடன் கிம், தனது அதிரடி வேலையை மீண்டும் காட்ட தொடங்கியுள்ளார்.
தென்கொரியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள செயோர்வான் (Cheorwon)மீது வடகொரிய ராணுவம் எவ்வித காரணமும் இன்றி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
வடகொரிய ராணுவத்தின் தாக்குதலை தொடர்ந்து தென்கொரியாவும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. வடகொரியாவின் தாக்குதலை உறுதி செய்துள்ள தென்கொரிய ராணுவ தளபதி, தங்கள் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக விளக்கமளித்தார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
1953-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப ரீதியான போர்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இதனையடுத்து 2018ம் ஆண்டு இரு நாட்டு அதிபர்களும் மீண்டும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டனர். ஆனால் ஒருமுறை கூட வட கொரியா ஒப்பந்தத்தை மதித்து நடந்ததில்லை கடைசியாக 2017 ஆம் ஆண்டு தென் கொரியா மீது வடகொரியா துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.