வாஷிங்டன்:
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ்,”புளூ ஆரிஜின்” என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் “புளூ ஆரிஜின்” நிறுவன தயாரிப்பான “நியூ ஷெப்பர்ட் பூஸ்டர்” விண்கலத்தின் முதலாவது பயணத்தில், தான் தனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு செல்ல உள்ளதாக ஜெப் பெசோஸ்அறிவித்துள்ளார்.அடுத்த மாதம் (ஜூலை) 20-ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின்போது ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் மேலும் ஒருவர் இணையலாம் என்பதால் அந்த இருக்கைக்கான ஏலத்தை விட தொடங்கியிருக்கிறது புளூ ஆரிஜின் நிறுவனம்.இந்த ஏலமானத் வருகிற 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், 3-வது இருக்கைக்கான ஏலம் தொடங்கியதுமே 143 நாடுகளில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏலம் கேட்டனர். அதில் அதிகபட்சமாக ஒருவர் 2.8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடி) ஏலம் கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.