சாதனையாளர்கள் லைஃப் ஸ்டைல்

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 4 (வளர்த்த தந்தை)

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தான் பார்த்த, பழகிய,நேசித்த, கற்றுக் கொண்ட, கொண்டாடிய மனிதர்களை அவர்களுடனான தன் நினைவுகளை மூத்த பத்திரிக்கையாளர் எம்.ஜெ. பிரபாகர் பகிர்ந்து கொள்ளும் தொடர் இது.

தோழர் எம்.ஜெ.பிரபாகர்

தீக்கதிர் நாளிதழில் தட்டச்சு செய்பவராக பணி தொடர்ந்தது.மதுரை மத்திய பேருந்து நிலையம் அருகிலிருந்த மோட்டார் யூனியன் தொழிற்சங்க அலுவலகத்தில் தங்கியிருந்தேன். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆண்டாள் புறத்தில் வசிக்கும் அக்கா வசந்தா பெருமாள் வீட்டிற்குச் சென்று காலை உணவை முடித்துக்கொண்டு மதிய உணவை டிபன் கேரியர் கட்டிக் கொடுப்பார்கள், வாங்கிக்கொண்டு சைக்கிள் மூலமாகவே பைபாஸ் ரோடு வழியாக தீக்கதிர் அலுவலகம் வந்து செல்வது வாடிக்கை. தீக்கதிர் அலுவலகம் பணி முடித்துவிட்டு இரவு மோட்டார் யூனியனில் தொழிற்சங்க பணியும் தொடரும்.தீக்கதிர் அலுவலகத்தில் தோழர் சேஷகிரி மேலாளராக பொறுப்பேற்று நடத்திவந்தார். தீக்கதிர் நாளிதழில் ஆசிரியராக கே. முத்தையா செயல்பட்டு வந்தார்.தோழர் சேஷகிரி அனைத்து வகையிலும் என்னுடைய பணிகளை மேலும் செழுமைப்படுத்தும் விதமாக உதவினார்.
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு முழுமையாக முழுநேர ஊழியராக செயல்பட உதவியது தோழர் சேஷகிரி.

தலைவர்கள் ரயில் மூலமாகவோ பேருந்து மூலமாகவோ பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகாலை மதுரை வந்து அடைவார்கள்.அவர்களை தீக்கதிர் அலுவலகத்தில் இருந்த மிகப் பழமையான கார் மூலம் அலுவலகம் அழைத்து வரும் பணியினை நானே செய்தேன்.
வாகன ஓட்டுனர் இல்லையெனில் கட்சி வேலையாக கிராமங்களுக்கும் பொதுக்கூட்ட வேலையாக வாகனத்தை நானே ஓட்டிச்செல்வேன்.தட்டச்சு செய்யும் பணியோடு நின்றுவிடாமல் நிர்வாக பணிகளிலும் என்னை முழுமையாக கற்றுக் கொள்ள வைத்து என் தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள முக்கியமான காரணம் தோழர் சேஷகிரி.
அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால்தான் என்னவோ என்னை மகனாகவே பாவித்தார் .ஒவ்வொரு செயலிலும் நுணுக்கமாக கற்றுக் கொள்ள வேண்டியது குறித்து தெரிவித்துக் கொண்டே வந்தார். நிர்வாக பணியோடு நின்றுவிடாமல் இயக்கப் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்லிக்கொண்டே இருப்பார்.கட்சி மாநாடுகளில் பங்கெடுப்பது அரசியல் விவாதங்களில் ஈடுபடச் செய்வதும் அவசியம் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருப்பார்.

தீக்கதிர் அலுவலகப் பணி என்பது கட்சிப் பணியோடு சேர்ந்தது. ஆனால் கட்சிப் பணி சார்ந்து அரசோடு சேர்ந்து நிர்வாகப் பணியை செய்யவேண்டிய அவசியம் இருந்தது.
அரசு சார்புடைய அமைப்புகளான வங்கித்துறை மாவட்ட நிர்வாகத் துறை வருமான வரித்துறை மாநகராட்சி இதுபோன்ற அரசு அமைப்புகளோடு எப்படி எல்லாம் நடந்து தீக்கதிர் நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை தெளிவாக வழிநடத்தினார்.வங்கியில் தீக்கதிர் நாளிதழ் அச்சிடுவதற்கான பேப்பர் வாங்குவதற்கு கடன் பெறுவது வழக்கமான ஒன்று.காலப்போக்கில் அனைத்துப் பொருள்களின் விலை உயர்வால் கடன் வாங்கும் தொகையும் உயர்ந்தது. மதுரை மண்டல வங்கி தனக்கு இவ்வளவு தான் கடன் கொடுக்கும் அதிகாரம் உள்ளது, இதற்குமேல் கடன் வாங்க வேண்டும் என்றால் திருச்சியில் உள்ள மேலதிகாரிகளை சென்று பார்த்து அவர்களது ஒப்புதல் பெற்று வந்தால் உங்கள் கடன் தொகையை அதிகரித்து தருவதாக மதுரையிலுள்ள வங்கி அதிகாரிகள் கூறினர்.நானும் திருச்சியில் உள்ள வங்கி அதிகாரிகளை சென்று அணுகினேன் .நான் வந்திருக்கும் விவரத்தை அவரது உதவியாளர் மூலம் தெரிவித்துவிட்டு காத்திருந்தேன். 2, 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருப்பு நீடித்தது. எனக்கு பின்னால் வந்த பலரையும் அவர் அழைத்து பேசி அனுப்பிக் கொண்டிருந்தார். என்னை மட்டும் அழைக்கவில்லை எனக்கு கோபம் ஒருபுறம் இருந்தாலும் அந்த காரியத்தை நாம் முடிக்க வேண்டும் என்ற நிலையில் பொறுமையுடன் காத்திருந்தேன். பிற்பகல் உணவு அருந்த செல்வதற்கு முன்பு அதிகாரி என்னை அழைத்தார்.

தீக்கதிர் நாளிதழில் கடன் தொகையை அதிகரித்து தரவேண்டும் என்ற கோரிக்கை மனு கொடுத்தேன். மதுரையில் ஏற்கனவே பரிவர்த்தனை நடத்திய விவரங்களை மதுரையில் உள்ள வங்கி அதிகாரிகள் திருச்சி அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தார்கள் .எனவே அவருக்கு புரிய வைப்பதிலும் வழங்குவதிலும் எனக்கு சிரமங்கள் ஏற்படவில்லை.ஆனால் நீண்ட நேரமாக அவரது அறையிலிருந்து என்னை கண்காணிக்கிறார். நான் கொண்டு சென்ற நூல்களை நிதானமாக படித்துக்கொண்டு இருந்ததையும் அவர் கவனித்துள்ளார்.வங்கி அதிகாரி நீங்கள் கேட்ட கடன் தொகையை அதிகரித்து தரவும் ஒப்புகை அளித்துவிட்டார். நான் அவரிடமிருந்து விடைபெறும் முன், நீண்ட நேரமாக காத்திருக்க வைத்து விட்டீர்கள் எனக்கு பின்னால் வந்த நிறைய பேரை பார்த்து அனுப்பி விட்டீர்கள் என்னை மட்டும் தாமதமாக அளித்துள்ளீர்கள் ஏன் என்று கேட்டேன்.அதற்கு அந்த வங்கி அதிகாரி, கம்யூனிஸ்டுகள் என்றாலே கலைந்த தலை கோபமான முகபாவனையுடன் அழுக்கு வேஷ்டி சட்டையில் தான் இருப்பார்கள் ஆனால் நீங்கள் எங்கள் வங்கி அதிகாரிகள் போல் நீட்டாக பேண்ட் சட்டை போட்டு இன் பண்ணி வந்து இருக்கிறீர்களே இது தான் கம்யூனிஸ்டுகள் அழகா ? என்று கேட்டார்.

ALSO READ  கணவனால் கைவிடப்பட்டவர் போலீஸ் அதிகாரி ஆனார்


எனக்கு அவர் கேட்டது நகைச்சுவையை உருவாக்கிவிட்டது நன்கு சிரித்துவிட்டு பதில் கூறினேன்.ஆம் நீங்கள் கூறியது உண்மை இன்றைக்கும் அப்படித்தான் இருக்கிறோம். நாங்கள் மக்களிடம் பணம் வசூல் செய்து அதைக்கொண்டு இந்த பத்திரிகை நடத்துகிறோம் .இந்த பத்திரிகையில் மற்ற பத்திரிகைகள் போன்று விளம்பரங்கள் இருக்காது .மிகவும் கஷ்டப்பட்டு தான் இதழ் வெளிவருகிறது அதனால் தான் உங்களிடம் கடன் கேட்டு வந்திருக்கிறோம் என்று கூறினேன். அத்தோடு காலங்கள் மாறிவிட்டன .அன்றைக்கு காந்தி கதர் ஆடை தான் தேசிய ஆடையாக கடைப்பிடித்து வந்தார்.ஆனால் நான் மட்டுமில்ல பெருவாரியான இளைஞர்கள் பேண்ட் சட்டை தான் சரியான உடை என்பதாக கருதுகிறார்கள். எங்களுக்கு இதை சுத்தம் செய்வதிலும் மிகவும் எளிமையாக உள்ளது. வேஷ்டி சட்டை சுத்தம் செய்து அணிவதில் சிரமங்கள் உள்ளது என்பதையும் தெரிவித்தேன் .என் பதிலை ஏற்றுக் கொண்டவர் என்னோடு வாருங்கள் உணவருந்த செல்லலாம் என்று அழைத்தார். நான் இல்லை பரவாயில்லை அப்படி என்று கூறினேன் .இல்லை உங்களுடைய நேர்மையான பேச்சு எனக்கு பிடித்திருக்கிறது என்னோடு வாருங்கள் என்று அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுத்து என்னை அனுப்பி வைத்தார். என் முன்னாலே மதுரை வங்கி அதிகாரிகளுக்கு , அவர்கள் கேட்கும் கடன் தொகையை வழங்க உத்தரவிட்டார்.

ALSO READ  சர்ச்சையான விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்..
தோழர். எம்.ஜெ.பிரபாகர்

இதுபோன்றுதான் நிர்வாகப் பணியில் சரியான பாதையில் நெளிவு சுழிவுகளை கற்றுக் கொடுத்தது தோழர் சேஷகிரி. ஆனால் நெளிவு சுழிவு கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து எவ்வித சமரசமும் இருக்கக்கூடாது என்பதையும் கற்றுக்கொடுத்தார் தோழர் சேஷகிரி. தோழர் சேஷகிரி , கட்சியின் மாநில குழு உறுப்பினர் மாநிலக் குழு நடத்தும் அனைத்து கூட்டங்களிலும் தவறாமல் பங்கேற்பார். 1988 ஆம் ஆண்டு அவர் சென்னையில் நடந்த மாநிலக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று சில மாதங்களுக்கு பின்பு மதுரை தீக்கதிர் அவர்களிடம் வந்து சேர்ந்தார். தோழர் சேஷகிரி உடல்நிலையை கருத்தில் கொண்டு தீக்கதிர் நிர்வாகப் பொறுப்பை முழுமையாக ஏற்று செயல்படுமாறு கட்சி எனக்கு பணித்தது.மிகக்குறைந்த வயதுடைய எனக்கு மிகப்பெரிய பொறுப்பை கட்சி எனக்கு வழங்கியது.தீக்கதிர் நாளிதழில் நிர்வாக மேலாளராக நான் செயல்படுவதற்கு உந்துசக்தியாக இருந்தது என்னை வளர்த்த தோழர் சேஷகிரி யையே சாரும்.

-தொடரும்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நரம்பு தளர்ச்சி நீங்க ஆண்மை அதிகரிக்க உதவும் அருமருந்து பிரண்டை…

naveen santhakumar

மானின் உருவப் பாதையில் 9 மணி நேர சைக்கிள் பயணம் செய்த நபர்

Admin

ஆரோக்கியத்தை தரும் பயோட்டின் !

Admin