கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டு உள்ளது. இதில் கலைஞரின் உருவச்சிலை, அவரது தந்தையான முத்துவேல் நினைவு நூலகம், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் திருவாரூர் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று மாலை தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கபட்டிருந்த நிலையில், உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் நிதிஷ்குமாரின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதிஷ்குமாரின் வருகை ரத்தான நிலையில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். இதனால் அவர் தற்போது சென்னை புறப்பட்டுள்ளார்.