ஓசூர்:-
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை, முழுமையாக பெண்களால் நடத்தப்படும் ஆலையாக இருக்கும் என்றும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணி அமர்த்தப்பட இருப்பதாகவும் ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் தொடங்கி அதன் டெலிவரி வரை புதிய பாணியை ஓலா நிறுவனம் கையாளத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், பெண்களால் ஆன ஓலா தொழிற்சாலை என்ற புதிய அறிவிப்பை, ஓலாவின் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அகர்வால் தெரிவித்ததாவது,
தற்சார்பு இந்தியா திட்டமான ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு பெண்கள் தேவை. ஓலா ப்யூச்சர் தொழிற்சாலை, முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். முதலில், 10 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அடுத்தகட்ட ஆண்டுகளில் அது 20 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.
இது முழுவதும் பெண்களால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இருக்கும். பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குவது அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையையே மேம்படுத்தும் எனப் பதிவிட்டுள்ளார்.