தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து எம்.பி ஜோதிமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ஆக்சிஜன் ஆலைகள் அமைக்க 29 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மூன்று இடங்களுக்கு மட்டுமே இந்த ஆலைகளில் அமைப்பதற்கான முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.
எங்கள் கரூர் தொகுதியில் ஏற்கனவே ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த செய்திகள் வரத்தொடங்கியுள்ளன. கொரோனா நோயால் பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்பட ஒப்புதல் அளிக்கப்பட்ட பட்டியலில் கீழ்காணும் மருத்துவமனைகளையும் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
1. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – கரூர் மாவட்டம்
2. அரசு மருத்துவமனை பழைய வளாகம், -கரூர் மாவட்டம்
3. அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மணப்பாறை, திருச்சி மாவட்டம்
மேற்கண்ட மருத்துவமனைகள் கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் உதவி செய்கின்றன. எனவே இந்த மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வருமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.