ஜம்மு காஷ்மீரில் 39 துணை ராணுவ வீரர்களுடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 6 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தோ – திபத்யன் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 39 துணை ராணுவ வீரர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி ராணுவ பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது
தெற்கு காஷ்மீர் பகுதியின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் என்ற இடத்தில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
39 பேர் பேருந்தில் பயணித்ததாக கூறப்படும் நிலையில் 37 பேர் இந்தோ திபத்யன் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணமாக கட்டுப்பாட்டை மீறி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் விபத்து நடந்த இடத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் உள்ளூர் ஆட்கள் உதவியுடன் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.